Blogs

பொய்கை ஆழ்வார்(60)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.

(முதல் திருவந்தாதி - 1)

பொய்கை ஆழ்வார் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா திருத்தலத்தில், பொற்றாமரைக் குளத்திலே தாமரைப் பூவில் அவதாரம் செய்தார். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரம். திருமாலின் பாஞ்சசன்னிய அம்சமாகத் தோன்றியவர்.

இவர் அருளியுள்ள பிரபந்தம் "முதல் திருவந்தாதி" என்று அழைக்கப்படுகிறது. அந்தாதி அமைப்பில் 100 பாசுரங்கள் கொண்ட இந்த பிரபந்தத்தில், திருவரங்கம், திருவிண்ணகர், திருக்கோவலூர், திருவெஃகா, திருவேங்கடம், திருப்பாற்கடல், பரமபதம் முதலிய திவ்ய தேசங்கள் குறித்து பாடியுள்ளார்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

தொண்டரடிப்பொடி ஆழ்வார்(61)

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

(திருமாலை - 1)

ஆழ்வார்களிலே ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆவார். இயற்பெயர் "விப்ர நாராயணன்". சோழ நாட்டில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் 'திருமால் வனமாலை'யின் அம்சமாக அவதரித்தார். திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு பெண்ணிடம் மயங்கச் செய்தான். அரங்கனை முற்றிலும் மறந்து தன் பொருளை அந்தப் பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அந்தப் பெண் ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான்.

உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான். அந்தப் பெண்ணும் மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.

அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி துளவத்தொண்டில் ஈடுபட்டார்.

இடையில் சிறிது காலம் அரங்கனை மறந்ததை பெரியக் குற்றமாக கருதிய ஆழ்வார், அதற்கு பரிகாரமாக அரங்கனின் தொண்டர்களின் திருவடித் தீர்த்தத்தை பருகினார் என்றும் அதன் காரணமாகவே "தொண்டரடிப்பொடி ஆழ்வார்" என்று பெயர் ஏற்பட்டதாகவும் வைணவப் பெரியோர் சொல்வர்.

அரங்கனிடம் கொண்ட பக்தியின் தீவிரத்தில் "திருமாலை" என்னும் பிரபந்தத்தை அருளினார். திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது, விசுவாமித்திரர் யாகம் காக்க அவருடன் காட்டிற்கு செல்கிறார். ராம லக்ஷ்மணர்கள், விசுவாமித்திர ரிஷியுடன் இரவு பொழுதைக் காட்டில் கழிக்கின்றனர். விடியல் வேளையில், "கௌசல்யா சுப்ரஜா ராமா...உத்திஷ்ட" என்று விசுவாமித்திரர் ராமனை துயில் எழுப்புகிறார். இது போல அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, "திருப்பள்ளி எழுச்சி" என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

பெரியாழ்வார்(62)

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*

உன் சேவடி செவ்வித்திருக்காப்பு

(திருப்பல்லாண்டு - 1)

பெருமாளுக்கு "பல்லாண்டு" பாடிய ஆழ்வார் இவர். ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேசத்தில், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம். ஸ்ரீ வடபத்ரசாயி கோயிலில் பட்டராக பெருமாளுக்கு தொண்டு செய்து வந்தார். கோயில் நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். பெருமாளிடம் தன் சித்தத்தை எப்பொழுதும் வைத்திருந்த காரணம் பற்றி "விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்பட்டார்.

இவர் அருளிய பாசுரங்கள் "பெரியாழ்வார் திருமொழி" என்று தொகுக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 473 பாசுரங்கள். இவற்றுள் நிறைய பாசுரங்கள் யசோதை பாவனையில் கிருஷ்ணாவதாரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பாடும் வகையில் அமைந்துள்ளன. கண்ணனின் அவதாரம், பாதாதி கேச வர்ணனை, கோகுலத்தில், பிருந்தாவனத்தில், துவாரகாவில், ஹஸ்தினாபுரத்தில், பாரதப் போரில், என்று அடியார்கள் மனம் கவரும் கிருஷ்ணாவதார லீலைகள் அனைத்தையும் பாசுரங்களில் ஈரத் தமிழில் அருளியிருக்கிறார்.

கண்ணனை தம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கக் கண்ட மகான். பெரியாழ்வார் பாசுரங்கள் நம்மையும் அவன் அருகில் அழைத்துச் செல்லும் என்பதை கீழ்காணும் பெரியாழ்வார் திருமொழியின் இறுதி பாசுரத்தால் அறியலாம்.

"வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே

கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை

ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை

சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே."

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

இராப்பத்து(63)


ஸ்ரீ ரங்கத்தில் அரையர் சேவை...சில குறிப்புகள்

இராப்பத்து -  இந்த உற்சவம்  மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியில் இருந்து நடக்கும் பத்து நாள் உற்சவம். இந்த உற்சவத்தில் ரங்கநாதன் ஆயிரங்கால் மண்டபத்தின் மத்தியில் உள்ளதும், வெகு அழகாக அலங்கரிக்கப் பட்டதுமான திருமாமணி மண்டபத்தில்  வீற்றிருப்பார். பரமபதத்தில் பகவான் எழுந்தருளி இருக்கும் திருமாமணி மண்டபத்தின்படி இந்த மண்டபம் கட்டப்பட்டு இருப்பதால் அதேப் பெயர் இதற்கும் ஏற்பட்டது.  இந்தத் திருநாளில் நடக்கவேண்டிய முக்கியமான காரியமாகிய அரையர் சேவை, ஆதியில் இரவில் நடத்தப்பட்டபடியாலும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி, அரையரால் பெருமாள் முன்பாக கானம் செய்யப் படுவதாலும், இந்த உத்சவத்திற்கு 'இராப்பத்து' அல்லது 'திருவாய்மொழித்   திருநாள் " என்று பெயர் ஏற்பட்டது.

முகுந்தமாலா-16(64)

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சய அச்யுதகதா: ஷ்ரோத்ரத்வய ! த்வம் ஷ்ருணு
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர்-கச்ச அங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண ! முகுந்த பாத துளஸீம் மூர்த்தந் ! நமாதோக்ஷஜம் !

[பொருள்]
நாவே ! கேசவனை துதி செய்வாயாக;
மனமே ! முராரியை பஜனை செய்வாயாக;
கைகளே ! ஸ்ரீதரனுக்கு அர்ச்சனை செய்வீர்;
காதுகளே ! அச்சுதனின் கதைகளைக் கேட்பீர்;
கண்களே ! கிருஷ்ணனைக் காண்பீர்;
கால்களே ! ஹரியின் ஆலயத்திற்கு செல்லுங்கள்;
நாசியே ! முகுந்தனின் பாத துளசியை நுகர்வாயாக;
தலையே ! நீ ஆண்டவனை வணங்குவாயாக !

பாடசாலை செய்தி பத்திரிகை - ஜனவரி 2011(65)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஜனவரி 2011.

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

மரங்களும் இரங்கும் - தொலைவில்லிமங்கலம் பாசுரங்கள்(68)

(ராகம்; கர்நாடக தேவகாந்தாரி)
துவள் இல் மாமணி மாடம் ஓங்கு
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் ! உமக்கு
ஆசை இல்லை; விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே.
(திருவாய்மொழி - 6.5.1)
குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
நெக்கு ஒசிந்து கரையுமே.
(திருவாய்மொழி - 6.5.2)
இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
மணிவண்ணாவோ என்று கூவுமால்;
துரங்கம் வாய் பிளந்தான் உறை
தொலைவில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
திருநாமம் கற்றது என் பின்னையே.
(திருவாய்மொழி - 6.5.9)
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் !

பாசுரங்கள் - வாமன அவதாரம், அனந்தபுரம், திருவோணம்(69)

உடுத்துக் கலைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம்திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு - 9)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ ! வையம் அளந்தானே, தாலேலோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.3.1)

மாயா ! வாமனனே ! மதுசூதா ! நீ அருளாய் !
தீயாய், நீராய், நிலனாய், விசும்பாய், காலாய்
தாயாய், தந்தையாய், மக்களாய், மற்றுமாய், முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி - 7.8.1)

கெடுமிடர் ஆயவெல்லாம் கேசவா என்றிட நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் சூழ் அனந்தபுரம் புகுதும் இன்றே !

(நம்மாழ்வார் திருவாய்மொழி - 10.2.1)

பரிமுகமாய் அருளிய எம் பரமன்(70)

முன் இவ்வுலகு ஏழும் இருள் மண்டியுண்ண
முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின்,
செந்நெல் மலிகதிர்க் கவரி வீசச் சங்கம் அவை முரலச்
செங்கமல மலரை ஏறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.

(பெரிய திருமொழி - 7.8.2)

கூரேசர் தாலாட்டு(71)

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.